பென்னாகரம் அருகே கொடூரம்: பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசு ஏரியில் வீசி கொலை-உடலை மீட்டு போலீசார் விசாரணை


பென்னாகரம் அருகே கொடூரம்: பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசு ஏரியில் வீசி கொலை-உடலை மீட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஏரியில் வீசி கொலை செய்யப்பட்டது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏரியில் பெண் குழந்தை உடல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாய்க்கனூர் ஏரி உள்ளது. இந்த ஏரி சமீபத்தில் பெய்த மழை காரணமாக நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் நேற்று காலை ஏரி வழியாக தங்களது நிலங்களுக்கு சென்றனர். அப்போது ஏரி தண்ணீரில் ஒரு சிசுவின் உடல் மிதப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, ஏரியில் பிணமாக மிதந்த சிசுவின் உடலை மீட்டனர். அப்போது ஏரியில் பிணமாக மிதந்தது பெண் சிசு என்பதும், தொப்புள் கொடியுடன் காணப்பட்டதால் பிறந்து 2 நாட்களே ஆனதும் தெரியவந்தது.

ஏரியில் வீசி கொலை

இதையடுத்து போலீசார் பெண் சிசுவின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் சிசு ஏரியில் வீசி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் பெண் சிசு என்பதால் பெற்றோர்களே ஏரியில் வீசி சென்றார்களா?, அல்லது முறையற்ற உறவில் பிறந்ததால் ஏரியில் வீசி கொலை செய்யப்பட்டதா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவரங்கள் சேகரிப்பு

இதேபோல் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் மற்றும் கர்ப்பிணிகள், சமீபத்தில் குழந்தை பெற்ற தாய்மார்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசு ஏரியில் வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story