இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கீரிப்பாறை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
அழகியபாண்டியபுரம்,
கீரிப்பாறை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்
கீரிப்பாறை அருகே உள்ள தடிக்காரன்கோணம் குட்டிபொத்தை பகுதியை சேர்ந்தவர் ரதீஷ். மர வேலை செய்து வருகிறார். இவருக்கும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த அபிஷா (வயது26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு.
கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்கு கடன் தொல்லை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாக தெரிகிறது. அதன் பின்னர் இருவரும் தனித்தனியாக அறைகளில் தூங்க சென்றனர். அபிஷா குழந்தையுடன் தனி அறையில் தூங்க சென்றார்.
நேற்று காலையில் வெகுநேரமாகியும் அபிஷாவின் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவர் ரதீஷ் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அபிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற உள்ளது.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.