இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வெள்ளியணை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண்
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி மருதம்பட்டி காலனியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் ஜனத் நிஷா (வயது 21). இவருக்கும், சோமூர் கல்லுபாளையத்தை சேர்ந்த முகமது ராஜா (25) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 3 மாதங்களான நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. இதனால் ஜனத்நிஷா மருதம்பட்டி காலனியில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கியிருந்து வேடசந்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.
தூக்கில் தொங்கினார்
இந்நிலையில் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை யை யொட்டி ஜனத் நிஷாவின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள், தாந்தோணிமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த ஜனத்நிஷா சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். இதற்கிடையில் உறவினர் வீட்டுக்கு சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது, ஜனத்நிஷா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜனத்நிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, ஜனத்நிஷா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.