உடல் கருகிய போலீஸ்காரர் மகள் சாவு


உடல் கருகிய போலீஸ்காரர் மகள் சாவு
x

திருக்கார்த்திகை அன்று அகல் விளக்கு ஏற்றியபோது உடல் கருகி படுகாயம் அடைந்த போலீஸ்காரர் மகள் சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தாள்.

தஞ்சாவூர்

திருக்கார்த்திகை அன்று அகல் விளக்கு ஏற்றியபோது உடல் கருகி படுகாயம் அடைந்த போலீஸ்காரர் மகள் சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தாள்.

போலீஸ்காரர் மகள்

திருவாரூர் கம்பர் தெரு பகுதியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த்(வயது 31). இவர், திருவாரூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மாமியார் வீடு பட்டுக்கோட்டை நகரில் காட்டுநாயக்கன் தெருவில் உள்ளது.

பாட்டி வீட்டில் தங்கி இருந்த இவருடைய 7 வயது மகள் சம்யுக்தா, பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள்.

தீயில் கருகினாள்

கடந்த 6-ந் தேதி திருக்கார்த்திகை அன்று தன்னுடைய பாட்டி வீட்டில் சிறுமி சம்யுக்தா அகல் விளக்கு ஏற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய ஆடையில் தீப்பற்றி அவள் உடல் மீதும் தீ பரவியது.

இதில் உடல் கருகி படுகாயம் அடைந்த சம்யுக்தாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் சம்யுக்தா மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தாள். இது குறித்து அவருடைய தந்தை விஜய் ஆனந்த், பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story