உடன்குடியில் பூட்டிய வீட்டில் பெண் மர்ம சாவு கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
உடன்குடியில் பூட்டிய வீட்டில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
குலசேகரன்பட்டினம்:
உடன்குடியில் பூட்டிய வீட்டில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனை தொழிலாளி
உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. பனைத்தொழிலாளி. இவருடைய மனைவி சுயம்புகனி (வயது 55). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர்.
சுயம்பு தைக்காவூரில் தங்கியிருந்து பனை ஏறும் தொழில் செய்து வருகிறார். வாரத்தில் ஒருநாள் வீட்டுக்கு வந்து சம்பள பணத்தை சுயம்புகனியிடம் கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுயம்பு தனது சம்பள பணத்தை மனைவியிடம் கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீடு பூட்டிக் கிடந்ததால் மனைவி தனது பிள்ளைகளை பார்க்க சென்னைக்கு சென்றிருக்கலாம் என கருதி சுயம்பு வேலைக்கு சென்று விட்டார்.
வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்
நேற்று வீட்டில இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு ஆடைகள் களையப்பட்டு அரை நிர்வாண நிலையில் சுயம்புகனி பிணமாக கிடந்தது தெரியவந்தது.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுயம்புக்கனி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.