அக்கா தங்கச்சியை பாம்பு கடித்தது-தங்கை பலி,அக்காவிற்கு தீவிர சிகிச்சை


அக்கா தங்கச்சியை  பாம்பு கடித்தது-தங்கை பலி,அக்காவிற்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 Jun 2023 12:34 AM IST (Updated: 10 Jun 2023 11:54 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண்ணின் 2 மகள்களை பாம்பு கடித்தது. இதில் ஒரு சிறுமி உயிரிழந்தாள். மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மதுரை

திருமங்கலம்,

ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண்ணின் 2 மகள்களை பாம்பு கடித்தது. இதில் ஒரு சிறுமி உயிரிழந்தாள். மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

5 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். கோவையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி (வயது 35).

இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகபிரியா, சிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள். நாகலட்சுமி மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளராக இருந்து வந்தார்.

பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் ஒருவரும், பஞ்சாயத்து செயலாளரும் தன்னை பணியில் இருந்து விலகுமாறு வற்புறுத்தியதாக கூறி, 2 மாதங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் இருந்து குதித்து நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். 5 பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு, அவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், உருக்கத்தையும் ஏற்படுத்தியது. அதன்பின்பு நாகலட்சுமியின் கணவர் கணேசன், 5 பெண் குழந்தைகளையும் பராமரித்து வந்தார்.

பாம்பு கடித்தது

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கணேசன் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அவருடைய 2-வது மகள் விஜயதர்ஷினியும் (9), 4-வது குழந்தை சண்முகபிரியாவும் (4), தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் குளித்துள்ளனர்.

அப்போது, பாம்பு ஒன்று அக்காள் - தங்கையை கடித்தது. இதில் சிறுமிகள் அலறியபடி மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர்.

உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். சிறுமிகளை கடித்த பாம்பை அடித்துக்கொன்றனர்.

சிறுமி சாவு

பின்னர் 2 சிறுமிகளையும், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இதில் சண்முகபிரியா சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். விஜயதர்ஷினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சோக சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட 2 மாதத்தில், அவருடைய பெண் குழந்தை பாம்பு கடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story