ஈரோட்டில் இளம்பெண் கொலை:"கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொன்றேன்"கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
ஈரோட்டில் இளம்பெண் கொலை சம்பவத்தில் “கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொன்றேன்” என்று கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.
ஈரோட்டில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், "கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொன்றேன்" என்று கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
குடும்பத்தகராறு
ஈரோடு சூரம்பட்டி மாரப்பா முதல் வீதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 35). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி கோகிலவாணி (26). இவர்களுக்கு கோவர்த்தன், கோவர்த்தினி ஆகிய 1½ வயதுடைய இரட்டை குழந்தைகள் உள்ளன.
கோகிலவாணியின் மீது சென்னியப்பனுக்கு நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கோகிலவாணி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் சிவகிரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
கொலை
இந்தநிலையில் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கோகிலவாணியை சென்னியப்பன் அழைத்து உள்ளார். இதனால் அவர் தனது குழந்தை கோவர்த்தனை தூக்கி கொண்டு ஈரோட்டுக்கு கடந்த 25-ந் தேதி வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சென்னியப்பன் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த கோகிலவாணியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை செய்தார். இதையடுத்து தனது குழந்தையுடன் சென்னியப்பன் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னியப்பனை கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
கள்ளத்தொடர்பு
எனது மனைவிக்கு வேறுஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் கள்ளத்தொடர்பில் இருந்த விவரம் எனக்கு தெரியவந்ததும், எனது மனைவியை அழைத்து கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அவர் கோபித்து கொண்டு அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரை குடும்பம் நடத்த வருமாறு மீண்டும் அழைத்தேன். இதையடுத்து கோகிலவாணி வீட்டுக்கு வந்தபிறகு, கள்ளத்தொடர்பை கைவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையை பற்றியே நினைத்து கொண்டிருந்ததால், எனது கோபம் மேலும் அதிகரித்தது. எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று மதியம் கோகிலவாணி தூங்கிக்கொண்டு இருந்தபோது, வீட்டில் இருந்த ஆட்டுக்கல்லை தூக்கி கொண்டு வந்து அவருடைய தலையில் போட்டேன். இதில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே கோகிலவாணி உயிரிழந்தார்.
இவ்வாறு சென்னியப்பன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
குழந்தைகள் ஒப்படைப்பு
தாய் கொலை செய்யப்பட்டதாலும், தந்தை சிறைக்கு சென்றதாலும் பெற்றோரின் ஆதரவின்றி இரட்டை குழந்தைகளும் தவித்து வருகின்றன. அந்த குழந்தைகளை கோகிலவாணியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.