சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை முயற்சி
முத்துப்பேட்ட அருகே குடும்பத்தகராறில், சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்ட அருகே குடும்பத்தகராறில், சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப பிரச்சினை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால்(வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வீரம்மாள்(35). இவர்களுடைய 6 வயது மகள் சுபத்திராதேவி. இவள், அருகில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.கோபாலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத்தகராறில் வீரம்மாளை கோபால் தாக்கியதாக தெரிகிறது.
தாக்குதல்
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வீரம்மாளை மீட்டனர். பின்னர் வீரம்மாள் இதுகுறித்து முத்துப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.இருப்பினும் மனம்மாறாத கோபால் நேற்று முன்தினம் மீண்டும் மனைவியிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது வீரம்மாள் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் இரவு தூங்கினார்.
விஷம் கொடுத்து கொலை
நேற்று காலை கண்விழித்த வீரம்மாள் தனது வீ்ட்டுக்கு சென்றாா். அப்போது வீட்டில் கணவர் கோபால் தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து மயங்கி கிடந்தது தொிய வந்தது. உடனே அவர் சத்தம் போட்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து தந்தை- மகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் இருவரும் அங்கிருந்து மேல் சிசிக்சைக்கு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சுபத்திராதேவி பரிதாபமாக உயிரிழந்தாள். கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.