வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த 10-ம் வகுப்பு மாணவி
3 நாட்களில் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு கலெக்டரிடம் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மனு அளித்தார். படிக்க சிரமமாக இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
3 நாட்களில் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு கலெக்டரிடம் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மனு அளித்தார். படிக்க சிரமமாக இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு மாணவி
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள எரவாஞ்சேரி ஓ.என்.ஜி.சி. தெருவை சேர்ந்தவர் சிவானந்தம். விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ராஜேஸ்வரி(வயது 18), விக்டோரியா(15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இதில் விக்டோரியா திருமருகல் அருகே மருங்கூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு தனது பெற்றோருடன் வந்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது பெற்றோர் திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே சோழங்கநல்லூர் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எரவாஞ்சேரியில் இடத்தை விலைக்கு வாங்கி புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறோம்.
மின் இணைப்பு இல்லை
இந்த வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் கொடுத்து 10 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுநாள் வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. நானும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத தயாராகி விட்டேன்.
இதுகுறித்து ெதாடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'உங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க புதிதாக 2 மின்கம்பங்கள் நட வேண்டும். அதற்கு மின்வாரிய அலுவலகத்திற்கு டெபாசிட் தொகையாக ரூ.14 ஆயிரம் கட்ட வேண்டும்' என கூறினார்கள். அந்த அளவிற்கு டெபாசிட் தொகை கட்ட எனது தந்தையிடம் வசதி இல்லை. டெபாசிட் தொகையை ஊராட்சி அலுவலகம் வாயிலாக கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுத்தேர்வுக்கு படிக்க சிரமம்
நவீன அறிவியல் காலத்தில் மின்சார வசதி இல்லாமல் இருப்பது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது. மின் வசதியின்றி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களை படிப்பதற்கும் சிரமமாக உள்ளது. எனவே மின் இணைப்பு வழங்கி உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மாணவி ஒருவர் மின் இணைப்பு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.