சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு: அண்ணன்-தம்பிக்கு சிறை தண்டனை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு: அண்ணன்-தம்பிக்கு சிறை தண்டனை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அண்ணன்-தம்பிக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்

விருத்தாசலம் அருகே உள்ள ராசாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் சிங்காரவேலு (வயது 59), ராஜூ (49). அதே பகுதியை சேர்ந்த பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா விடுமுறையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த போது சிறுமியை ராஜூ பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது சிங்காரவேலு, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலு, ராஜூ ஆகியோரை கைது செய்தனர்.

2 பேருக்கு சிறை

மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ராஜூவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், சிங்காரவேலுவுக்கு 5 ஆண்டு சிறையும் மேலும் இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் அரசின் ஏதாவது ஒரு நிதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.


Next Story