சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x

தஞ்சை அருகே சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை அருகே சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

14 வயது சிறுமி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மணியம்பாடி போசிநாயக்கன்ஹால் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சேகர்(வயது 32). மலையபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்த செல்வகுமாரின் மனைவி மாதுலட்சுமி(34).கடந்த 2019-ம்ஆண்டு மாதுலட்சுமி, தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டைக்கு உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை சேகருடன் பேசுமாறு வலியுறுத்தி வந்துள்ளார். பின்னர் சேகரை அம்மாப்பேட்டைக்கு வருமாறு அழைத்து சேகருடன் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.

கர்ப்பம்

இந்த நிலையில் சிறுமியை காணாததால் அவருடைய பெற்றோர், பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இந்த நிலையில் சேகர் அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு தர்மபுரி சென்றதோடு அங்கு வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமியுடன் தனிமையில் இருந்ததால் சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதற்கிடையே சிறுமி தர்மபுரியில் இருப்பதாக தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் சிறுமியின் பெற்றோர் அங்கு சென்று அவளை அழைத்து வந்தனர். இதற்கிடையில் சிறுமியின் கர்ப்பம் கலைந்தது.

5 பேருக்கு சிறை தண்டனை

இது தொடர்பாக சேகர், மாதுலட்சுமி, உடந்தையாக இருந்ததாக தர்மபுரியை சேர்ந்த ராஜூ என்ற ராஜா(60), முனியம்மாள்(35), வடிவேல் மகன் மகேஷ்(35) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.இந்த வழக்கில் நீதிபதி சுந்தர்ராஜன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சேகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதேபோல் மாதுலட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், ராஜா, முனியம்மாள், மகேஷ் ஆகிய 3 பேருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.


Next Story