குமரி கல்லூரி மாணவரை கொன்றதாக அதிரடி கைது: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற காதலி; ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி
களியக்காவிளை அருகே கல்லூரி மாணவரை கொன்றதாக கைது செய்யப்பட்ட அவரது காதலி நேற்று திருவனந்தபுரம் நெடுமங்காடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கழிவறையில் தற்கொலைக்கு முயன்றார்.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே கல்லூரி மாணவரை கொன்றதாக கைது செய்யப்பட்ட அவரது காதலி நேற்று திருவனந்தபுரம் நெடுமங்காடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கழிவறையில் தற்கொலைக்கு முயன்றார்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவருடன் காதல்
கேரள மாநிலம் பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் ஷாரோன் ராஜ் (வயது 23), குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவரும், குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கிரீஷ்மா குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்த போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
பின்னர் காதல்ஜோடி பல இடங்களுக்கு சென்று சந்தோசமாக இருந்தனர். இந்த காதல் விவகாரம் கிரீஷ்மாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. மகளின் காதலை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் கிரீஷ்மாவிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஷாரோன்ராஜை மறந்து விடும்படி பெற்றோர் அறிவுரை கூறினர்.
ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம்
ஒரு கட்டத்தில் காதல் கசந்து போக கிரீஷ்மா பெற்றோர் கூறியபடி அவர்களுடைய பேச்சை கேட்க தொடங்கினார். காதலனிடம் இருந்து அவர் விலக முயன்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடினர். அதன்படி ராணுவ வீரர் ஒருவரை மகளுக்கு மணமுடிக்க நிச்சயதார்த்தமும் நடத்தி வைத்தனர். இதனை அறிந்த ஷாரோன்ராஜ் மிகவும் நொந்து போனார். இதுபற்றி காதலியிடம் அவர் கேட்ட போது பெற்றோர் வற்புறுத்தியதால் தான் சம்மதித்தேன். என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்று அழுது நாடகமாடியதாக கூறப்படுகிறது. அப்போதும் காதலியின் நாடகத்தை ஷாரோன்ராஜ் நம்பியுள்ளார்.
காதலி வீட்டுக்கு சென்றார்
காதலித்த போது கிரீஷ்மாவும், ஷாரோன்ராஜியும் ஒன்றாக சேர்ந்து ஏராளமான புகைப்படங்கள் எடுத்திருந்தனர். இந்த புகைப்படங்களை ஷாரோன்ராஜ் பத்திரமாக வைத்திருந்தார். இதனை அறிந்த கிரீஷ்மா, ராணுவ வீரரை திருமணம் செய்த பிறகு தன்னுடைய திருமண வாழ்க்கை காதலன் ஷாரோன்ராஜியால் பாதிக்க வாய்ப்பிருக்கும் என கருதி மீண்டும் அவர் ஷாரோன்ராஜிடம் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி காதலி தனது வீட்டுக்கு வரும்படி அழைத்ததன் பேரில் அவருடைய வீட்டுக்கு ஷாரோன்ராஜ் சென்றுள்ளார். அங்கு ஷாரோன்ராஜ் உடன் சென்ற நண்பர் அந்த பெண்ணின் வீட்டுக்கு வெளியே நின்றுள்ளார். ஷாரோன்ராஜ் மட்டும் அந்த வீட்டுக்குள் சென்று விட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.
சாவு
அப்போது காதலி வீட்டில் குளிர்பானம் குடித்ததாகவும், அதன் பிறகு தனக்கு வயிறு வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரை சிகிச்சைக்காக பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரது உடல் உறுப்புகள் மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு 25-ந் தேதி அன்று ஷாரோன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
திடீர் திருப்பம்
இதுகுறித்து ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராஜன் பாறசாலை போலீசில் கொடுத்த புகாரில், தனது மகனை அவனது காதலியும், பெற்றோரும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என தெரிவித்திருந்தார். ஆனால் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை.
பின்னர் இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. நேற்றுமுன்தினம் முதலில் காதலி கிரீஷ்மாவை விசாரணைக்கு அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மாணவர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
காதலி கைது
அதாவது விசாரணையில், காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். ராணுவ வீரருடன் திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய திருமண வாழ்க்கை காதலனால் பாதிக்கும் என்று கருதி ஷாரோன்ராஜை தீர்த்துக் கட்டியதாக கிரீஷ்மா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் இந்த கொலையில் கிரீஷ்மாவின் பெற்றோர் மற்றும் உறவினருக்கு தொடர்பு இருக்்கிறதா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவறையில் தற்கொலைக்கு முயற்சி
இதற்கிடையே கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவை நேற்று காலையில் நெடுமங்காடு புறநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என கிரீஷ்மா கூறியுள்ளார். அதற்கு போலீசார் அனுமதித்ததன் பேரில் கழிவறைக்கு சென்ற அவர் அங்குமிங்கும் சுற்றி பார்த்துள்ளார். அங்கு கழிவறையை கழுவ பயன்படுத்தப்படும் கிருமிநாசினி இருந்தது.இதனை பார்த்ததும் இனிமேல் உயிர் வாழக்கூடாது என்ற எண்ணம் கிரீஷ்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென அங்கிருந்த கிருமிநாசினியை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பில் ஏற்றி உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருடைய உடல்நிலை நன்றாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மாஜிஸ்திரேட்டு நேரடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தி அவருடைய விளக்கத்தை கேட்டறிந்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "தற்கொலை முயற்சி மேற்கொண்ட கிரீஷ்மா எப்போது ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை டாக்டர்கள் தெரிவிப்பார்கள். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்" என்றனர்.
மாணவரை கொன்ற காதலி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கழிவறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.