திருமணத்துக்கு காதலியின் குடும்பத்தினர் மறுப்பு: இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் தீக்குளிப்பு
திருமணத்துக்கு காதலியின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் தம்மம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தம்மம்பட்டி:
இலங்கை அகதிகள் முகாம்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அர்ஜூன் (வயது 21). பெயிண்டரான இவர், அதே முகாமில் உள்ள ஒரு பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
அந்த பெண்ணை திருமணம் செய்ய அர்ஜூன் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
தீக்குளிப்பு
இதில் மனம் உடைந்த அர்ஜூன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகிய அவர், அலறி துடித்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முகாமில் இருந்த மற்றவர்கள் அர்ஜூனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அர்ஜூனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீதம் தீக்காயம் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ஜூன் தீக்குளித்தது தொடர்பாக விசாரணை நடத்தினர்.