அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்; கலெக்டர் தகவல்
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
இன்று பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) மாலை தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நிறைவடைகிறது.
பவுர்ணமி நாட்களில் தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதாம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலப்பாதையில் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த 12 இடங்களில் அன்னதானம் செய்ய விரும்புவோருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போலீசார் மூலம் நடவடிக்கை
அன்னதானம் அளிக்க விருப்பம் உள்ளவர்கள் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் அல்லது மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரை 04175- 237416, 9865689838, 9047749266 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மேலும் பிளாஸ்டிக் பாக்கெட் மூலம் குடிநீர் விநியோகிக்கக்கூடாது. அன்னதானம் வழங்கும் இடத்திலேயே உணவருந்த பயன்படுத்திய பொருட்களை போட ஏதுவாக குப்பை கூடைகளை அன்னதானம் அளிப்பவர்களே எடுத்து வர வேண்டும்.
அன்னதானம் செய்யும் இடங்களில் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களால் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அனுமதி அளிக்கப்பட்ட இடம் தவிர வேறு இடங்களில் அன்னதானம் அளிப்பவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.