செல்போனுக்கு பதிலாக குழந்தைகளுக்கு புத்தகம் கொடுங்கள்கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேச்சு


செல்போனுக்கு பதிலாக குழந்தைகளுக்கு புத்தகம் கொடுங்கள்கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேச்சு
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செல்போனுக்கு பதிலாக குழந்தைகளுக்கு புத்தகம் கொடுங்கள் என பாதிரிக்குப்பத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

கடலூர்


சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் பாதிரிக்குப்பத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் வேல்முருகன், வரவு-செலவு அறிக்கை மற்றும் தீர்மானங்களை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெற்றோர் வறுமையில் இருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் குழந்தைகளை மட்டும் எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும். இடைநின்ற குழந்தை இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். 18 வயது வரை குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். செல்போனுக்கு பதிலாக குழந்தைகளுக்கு புத்தகம் கொடுங்கள்.

தவறான நட்பு

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன் தேவைப்பட்டது. ஆனால் தற்போது செல்போன் படிப்புக்கு தேவையில்லை. முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் தவறான நட்பை உருவாக்கும். அதனால் அந்த செயலிகளை எச்சரிக்கையாக கையாள வேண்டும். 12-ம் வகுப்பு படித்து முடிக்கும் வரை புத்தகம் மட்டுமே போதுமானது. குழந்தைகளுக்கு பாலியல் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

தற்போதுள்ள காலத்தில் குழந்தைகள் மது, போதை, குட்கா உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல், அவர்களுக்கு அவற்றால் ஏற்படும் தீமை குறித்து விளக்கி கூறுங்கள். குழந்தைகளை கண்காணிப்பது பெற்றோரின் பொறுப்பு. மேலும் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான புகார்களை 9080731320 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இதில் தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும். அதுபோல் பெண் குழந்தைகளுக்கு எதிராக எவ்வித குற்றங்கள் குறித்த தகவல்களையும் உரிய அலுவலர்களிடமோ, 1098 - 181 என்ற இலவச தொலைபேசி உதவி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றார்.

உறுதிமொழி ஏற்பு

இதையடுத்து பெண் குழந்தைகளின் பெருமையை போற்றி எதிர்காலத்தில் பெண் குலம் தழைக்க செய்வோம் என கலெக்டர் முன்னிலையில் கிராம மக்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானா அஞ்சும், ஊரக வளர்ச்சி மாவட்ட முதன்மை பயிற்றுநர் ஆரோக்கியசெல்வி, ஊராட்சி மன்ற துணை தலைவர் லட்சுமி ராமலிங்கம், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் கிரிஜா செந்தில்குமார், வேல்முருகன், மகேஸ்வரி விஜயராயலு மற்றும் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story