ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடைபாலம்


ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடைபாலம்
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடை பாலப்பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடை பாலப்பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

கடல்நீர்மட்டம் தாழ்வான காலங்களில் விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டுமே படகுகள் இயக்கப்படுகிறது. இதனால் கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்க்க முடியாத நிலை உள்ளது.

எனவே, விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் நடைபாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கண்ணாடி இழை நடைபாலம்

இந்த கோரிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் நேற்று விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும்-திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடைபாலம் அமைக்கும் பணியின் தொடக்க விழா கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டப பாறை பகுதியில் நேற்று நடந்தது. இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதளத்தில் இருந்து படகு மூலம் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோர் சென்றனர்.

நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கண்ணாடி இழை இணைப்பு பாலம் அமைக்கும் பணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

முன்னதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதளத்தில் இந்த பாலம் தொடர்பாக வைக்கப்பட்டு இருந்த வரைபடம், தொழில்நுட்ப விவரங்கள், பாலம் மாதிரி வரைபடம் ஆகியவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

விரிவாக்கப்பணி

மேலும், ரூ.20 கோடியில் விவேகானந்தர் மண்டப பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் படகு தளம் 100 மீட்டர் அளவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த பணிையயும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். மேலும், அங்கு வைக்கப்பட்டு இருந்த படகுதள விரிவாக்க பணிக்கான வரைபடம் மற்றும் விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள மிதவைக் கப்பலின் செயல்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

ஓராண்டுக்குள் முடிக்க திட்டம்

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுப்பணித்துறைகள், நெடுஞ்சாலைத்துறைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைகளின்கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே விவேகானந்தர் மண்டபமும்- திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ள பாறைகளின் மத்தியில் கண்ணாடி இழை நடைபாலத்தை அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அனுமதியுடன் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளேன். இந்த பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு- தரம்

ரூ.37 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த பாலத்தை அமைக்க இருக்கிறோம். இந்த பாலம் அமைந்தபிறகு திருவள்ளுவர் சிலையில் படகு மூலம் சுற்றுலாப் பயணிகளை இறக்கி விட்டால், திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு பாலத்தின் வழியாக விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதை மக்கள் பெரிதும் விரும்பிய காரணத்தினால்தான் அரசின் சார்பாக இந்த திட்டத்தை நிறைவேற்றப்படுகிறது. எந்த இயற்கைச் சீற்றம் வந்தாலும் பாலத்துக்கு எந்தவித குந்தகமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு மிகவும் கண்ணும், கருத்துமாக இருக்கிறது. அதனால் பாதுகாப்புடனும், தரத்துடனும் இந்த பாலம் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் அருணாச்சலம், மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.ஆஸ்டின், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபு, நிர்வாகிகள் பூதலிங்கம்பிள்ளை, எம்.ஜே.ராஜன் மற்றும் வக்கீல் மாதவன்முருகன், குட்டிராஜன் உள்பட அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story