நாகர்கோவிலில் பெண் போலீசாருக்கு கோ-கோ போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு சூப்பிரண்டு பாராட்டு
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் பெண் போலீசாருக்கு இடையே நடந்த கோ- கோ போட்டியில் குளச்சல் சரக அணி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களை சூப்பிரண்டு பாராட்டினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் பெண் போலீசாருக்கு இடையே நடந்த கோ- கோ போட்டியில் குளச்சல் சரக அணி முதலிடம் பிடித்தது.
மன அழுத்தம்
குமரி மாவட்ட போலீசார் மன அழுத்தம் இன்றி பணி புரியவும், நோய் இன்றி உற்சாகமாக தங்களது பணிகளை சரியாக செய்யும் பொருட்டும் உட்கோட்ட அளவிலான கிரிக்கெட், கைப்பந்து, கோ- கோ, இறகுபந்து, வடம் இழுத்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் பணியாற்றி வரும் போலீசாருக்கான கிரிக்கெட் போட்டி, கைப்பந்து போட்டி ஆகியவை நடந்து முடிந்துள்ளன.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான கபடி போட்டி நடந்தது. முதலில் நாகர்கோவில் சரக அணியும், கன்னியாகுமரி சரக அணியும் மோதின. இதில் நாகர்கோவில் சரக அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதே போல குளச்சல் சரக அணியும், தக்கலை சரக அணியும் மோதியதில் தக்கலை சரக அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் தக்கலை சரக அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது.
கோ-கோ போட்டி
இதைத் தொடர்ந்து பெண் போலீசாருக்கான கோ-கோ போட்டி நடைபெற்றது. இதில் இறுதி போட்டியில் குளச்சல் சரக அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டுகளை தெரிவித்தார்.