விசைப்படகுகளில் கடலுக்குள் சென்றுவெள்ளோட்டம் பார்த்த மீனவர்கள்
தூத்துக்குடியில் தடைக்காலம் முடிவடைவதால், விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க வெள்ளோட்டம் பார்த்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைவதால் மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று வெள்ளோட்டம் பார்த்தனர்.
தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 545 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
வெள்ளோட்டம்
மேலும், படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கி புதுப்பித்து தயார் நிலையில் வைத்து உள்ளனர். தொடர்ந்து மீனவர்கள் நேற்று தங்கள் படகுகளை வெள்ளோட்டம் பார்த்தனர். படகுகள் முறையாக பழுது நீக்கப்பட்டு உள்ளதா, என்ஜின் சீராக இயங்குகிறதா என்று பரிசோதனை செய்தனர்.
இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு டீசல் நிரப்பதல், சீரமைக்கப்பட்ட வலைகளை படகுகளில் ஏற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடிக்க செல்கின்றனர்
தடைக்காலம் முடிவடைந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்வதால் மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.