காளிகேசத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
காளிகேசத்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியான சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அழகியபாண்டியபுரம்:
காளிகேசத்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியான சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
காளிகேசம்
தடிக்காரன்கோணம் அருகே உள்ள காளிகேசம் பகுதியில் காட்டாறு ஓடுகிறது.
இந்த பகுதி பசுமை நிறைந்து காணப்படுவதால் இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
என்ஜினீயர் பலி
டெல்லி துவாரகா நகரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான சியாம்(வயது 28). இவருடைய மனைவியான நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் சுஷ்மா(26). புதுமண தம்பதியான இவர்கள் தலை தீபாவளிக்கு ஊருக்கு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சியாம் தனது மனைவி சுஷ்மாவுடன் காளிகேசம் சுற்றுலா தளத்தை சுற்றிப்பார்க்க சென்றார். அவர்கள் அங்கு ஆற்றில் குளித்த போது திடீரென சுஷ்மா தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை சியாம் காப்பாற்ற முயன்றபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இந்த நிலையில் மலைப்பகுதிகளில் மழை பெய்து வருதால் காளிகேசம் காட்டாற்றில் தொடர்ந்து வெள்ளம் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் காளிகேசம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட வன அதிகாரி இளையராஜாவின் உத்தரவின் பேரில் அழகியபாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.