விவசாயிகள் இருப்பிடத்திற்கு சென்று நெல் ஏலம்
தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகள் இருப்பிடத்திற்கு சென்று நெல் ஏலம் நடைபெற்றது.
பொறையாறு:
செம்பனார்கோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்றும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் செம்பனார்கோவில் பொறுப்பாளர் சிலம்பரசன், மயிலாடுதுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு முன்னிலையில் செம்பனார்கோவில் அருகே பரசலூரில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் நெல் ஏலம் நடைபெற்றது. இதில் 200 குவிண்டால் 400 மூட்டைகள் கொள்முதல் செய்ய பரிவர்த்தனை நடைபெற்றது. அதன்படி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1,650-க்கும் குறைந்தபட்சமாக ரூ.1,600-க்கும் விலைக்கு விற்பனையானது. மேலும் எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இல்லத்தில் இருந்தே தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் விற்று பயன் பெறலாம் என நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தெரிவித்தார்.