விவசாயிகளின் வீடுகளுக்கு சென்றுபோலி ஆர்கானிக் உரங்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை:வேளாண் அதிகாரி எச்சரிக்கை


விவசாயிகளின் வீடுகளுக்கு சென்றுபோலி ஆர்கானிக் உரங்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை:வேளாண் அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று போலி ஆர்கானிக் உரங்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

வெளிமாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வீடுகளுக்கு செனறு போலி ஆர்கானிக் உரங்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வே.பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உரம் இருப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் ராபி பருவத்தில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பயறுவகைகள், எண்ணை வித்துக்கள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் சுமார் 1.60 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் மானாவாரி சாகுடிபடி பருவம் தொடங்க உள்ள நிலையில் மானாவாரி பயிர் சாகுபடிக்கு தேவையான டி.ஏ.பி, யூரியா, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆதார் அட்டை

நடப்பு ஆண்டு ராபி பருவத்துக்கான உர விநியோகம் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் தேவைக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தனியார் உரக்கடைகளிலோ மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை வாங்க வேண்டும். விவசாயிகள் உரம் வாங்க செல்லும்போது தங்களின் ஆதார் அட்டையை கண்டிப்பாக உடன் எடுத்து சென்று விற்பனை முனையக் கருவியில் பில் போட்டு, அந்த பில்லில் உள்ள தொகையை மட்டும் செலுத்தி உரம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

விவசாயிகள் வெளிமாவட்டங்களில் இருந்து ஆர்கானிக் உரங்கள் என்ற பெயரில் தங்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து விற்பனை செய்யும் முகவர்களிடம் உரங்களை வாங்க வேண்டாம். உரங்களை அதிக விலைக்கு விற்றல், இணைப்பொருட்களை வாங்க கட்டாயபடுத்துதல், வெளிமாவட்டங்களில் இருந்து வந்து போலி ஆர்கானிக் உரங்களை நேரடியாக விவசாயிகளுக்கு முகவர்கள் மூலம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற புகார்களுக்கு வட்டாரம் வாரியாக கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்களில் விவசாயிகள் தொடர்பு கொண்டு நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

அதன்படி கயத்தாறு 9080767716, கோவில்பட்டி 7092193209, ஓட்டப்பிடாரம் 9786301904, விளாத்திகுளம் 7708575642, புதூர் 8300159451, தூத்துக்குடி 8056764148, கருங்குளம் 8072156282, ஸ்ரீவைகுண்டம் 9894987290, ஆழ்வார்திருநகரி 7904264058, திருச்செந்தூர், உடன்குடி 9003896396 மற்றும் சாத்தான்குளம் 7904264058 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மாவட்ட அளவில் உரங்கள் தொடர்பான புகார்களை தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், 0461-2340678 மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு 9655429829 என்ற எண்களிலும் விவசாயிகள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story