நாய்கள் கடித்து 10 ஆடுகள் செத்தன
ஊத்துகுளி அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் செத்தன.
ஊத்துக்குளி
ஊத்துகுளி அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் செத்தன.
ஆடுகள் செத்தன
ஊத்துக்குளி சாலப்பாளைத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவர் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு ஓட்டி சென்றார். பின்னர் மாலையில் ஆடுகளை பட்டிக்கு ஓட்டி வந்து அடைத்தார். இந்த நிலையில் நேற்று காலை ஆட்டுப்பட்டிக்கு சென்றபோது பட்டியில் இருந்த 10 ஆடுகள் செத்து கிடந்தது. இந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றது தெரியவந்தது. ஊத்துக்குளி பகுதியில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகளை நாய்கள் கடித்து கொல்வது வாடிக்கையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் வெள்ளைகவுண்டன் புதூர் குட்டைகாடு பகுதியை சேர்ந்த சின்னமணி என்பவருக்கு சொந்தமான 9 ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றன. அதே போல் தெற்காலதோட்டம் பகுதிக்குள் புகுந்த தெருநாய்கள் அங்கு கட்டி வைத்திருந்த மாட்டை கடித்து கொன்றன. மேலும் தங்கமுத்து என்பவருக்குச் சொந்தமான மாட்டையும் கடித்து குதறின.இதில் 2 மாடுகள் செத்தன. வடுகபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் எருமை கன்று ஒன்றை தெரு நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தொடர் சம்பவத்தால் விவசாயிகள் கால்நடைகளை தங்கள் வீட்டில் கட்டி வளர்ப்பதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.
கோரிக்கை
ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் தெரு நாய்கள் சுற்றி வருவதுடன் இரவு நேரங்களில் கால்நடைகளான மாடு, எருமை, ஆடுகளை கடித்து வருவதினால் கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.