மர்ம விலங்கு கடித்து 10 வெள்ளாடுகள் செத்தன


மர்ம விலங்கு கடித்து 10 வெள்ளாடுகள் செத்தன
x

முத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்து 10 வெள்ளாடுகள் பரிதாபமாக செத்தன.

திருப்பூர்

முத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்து 10 வெள்ளாடுகள் பரிதாபமாக செத்தன.

ஆடு வளர்ப்பு

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ரங்கப்பையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் நல்லக்கண்ணன். கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் வருமானம் ஈட்டுவதற்காக வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நல்லக்கண்ணன் சேரம்பாளையம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து உள்ளார். இந்த ஆட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தனது வெள்ளாடுகளை அடைத்து வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் நேற்று காலை 6 மணிக்கு ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்த போது உள்ளே இருந்த 10 வெள்ளாடுகளும் ரத்தம் சிந்திய நிலையில், தலை, கழுத்து, உடம்பு பகுதி முழுவதும் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வெள்ளாடுகள் உயிரிழப்பு

இது பற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நல்லக்கண்ணன் ஆட்டுப்பட்டிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ மர்ம விலங்கு அல்லது வெறி நாய் உள்ளே புகுந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை கடித்து குதறி விட்டு சென்றதும், இதனால் 10 வெள்ளாடுகளும் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து முத்தூர் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து உயிரிழந்த வெள்ளாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இறந்த அனைத்து வெள்ளாடுகளும் அப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டன. ஆட்டுப்பட்டிக்குள் மர்ம விலங்கு அல்லது வெறி நாய் புகுந்து கடித்து குதறியதில் உயிரிழந்த 10 வெள்ளாடுகளின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் ஆகும்.

மேலும் உயிரிழந்த வெள்ளாடுகளுக்கு மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை அதிகாரிகள் மூலம் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று நல்லக்கண்ணன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story