கூட்டமாக வந்து 2 ஆடுகளைகடித்துக் கொன்ற நாய்கள்
மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டி பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் அங்குள்ள இட்டேரி பகுதியில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கமாகும். அந்த வகையில் நேற்று செல்வநாயகி என்பவர் தனக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு விட்டு அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்துள்ளார். மாலை 6 மணியளவில் எங்கிருந்தோ கூட்டமாக வந்த நாய்கள் ஆடுகளைக் கடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட்டு நாய்களை விரட்ட முயன்றுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கமுள்ள விவசாயிகளும் இணைந்து நாய்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெறித்தனமாக ஆடுகளைக் கடித்த நாய்கள் விவசாயிகளையும் விரட்டத் தொடங்கின. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் கற்கள், குச்சிகள் உதவியுடன் நாய்களை அங்கிருந்து விரட்டினர்.அதற்குள் நாய்கள் 2 ஆடுகளை கடித்துக் குதறியிருந்தன.ரத்த வெள்ளத்தில் போராடிய 2 ஆடுகளும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தன.விவசாயிகளின் கண் முன்னே நடந்த நாய்களின் வெறியாட்டம் இதற்கு முன் ஆடுகளை வேட்டையாடியதும் நாய்களாக இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது
நகரப்பகுதியில் மட்டுமல்லாமல் கிராமப்பகுதிகளிலும் இறைச்சிக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. அவை சாலை ஓரங்களிலும், நீர் நிலைகளிலும் வீசப்பட்டு வருகிறது. உணவு தேடி அலையும் நாய்கள் இந்த இறைச்சிக் கழிவுகளை உணவாக்கிக் கொள்கின்றன. அந்த ரத்தத்தின் சுவைக்கு பழகிய நாய்கள் இதுபோன்ற வேட்டை சம்பவத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வேட்டைக்கு பழக்கப்படுத்தப்பட்ட நாய்கள் வீதியில் விடப்படுவதும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.