ஆட்டைக்கடித்து,மாட்டை கடித்து,மனிதனையும் துரத்தும் நாய்கள்


ஆட்டைக்கடித்து,மாட்டை கடித்து,மனிதனையும் துரத்தும் நாய்கள்
x
திருப்பூர்


மடத்துக்குளம் அருகே ஆட்டைக்கடித்து, மாட்டை கடித்துதற்போது மனிதனையும் கடிக்க நாய்கள் துரத்தி வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கால்நடை வளர்ப்பில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலங்களாக தாந்தோணி, மைவாடி, கருப்புசாமிபுதூர், படையாச்சிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம விலங்கால் கால்நடைகள் வேட்டையாடப்பட்டு வந்தது. அந்த விலங்கை அடையாளம் காணும் வகையில் பல இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டி பகுதியில் உள்ள இட்டேரி மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கூட்டமாக வந்த நாய்கள் கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தது. பொதுமக்கள் கண்ணுக்கு முன்பாகவே நடந்த இந்த சம்பவத்தால் கால்நடைகளை வேட்டையாடுவது நாய்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 2 ஆடுகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகில் பாப்பான்குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த கலாமணி என்பவருக்கு சொந்தமான 1 ஆடு நாய்களால் கடித்துக் கொல்லப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஆபத்து

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கன்றுகள் கடித்துக்கொல்லப்பட்டுள்ளது. பொதுவாக இரவு நேரங்களில், மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் கால்நடைகள் வேட்டையாடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அருகில் ஆட்கள் இருக்கும் போதே கூட்டமாக வரும் நாய்கள் ஆடுகளை கடித்துக்குதறுகிறது. அதுமட்டுமல்லாமல் மனிதர்களையும் துரத்துகிறது. ஆட்டைக்கடித்து...மாட்டைக் கடித்து... தற்போது மனிதர்களைக் கடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை வெறும் நாய்க்கடி என்று எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் கூட்டமாக வரும் நாய்கள் வெறி பிடித்தது போல மனிதர்களையும் கடிக்கத்துரத்துகிறது. அவ்வாறு கூட்டமாக வரும் நாய்களிடம் குழந்தைகள் சிக்கிக்கொண்டால் நிச்சயமாக கடித்து குதறி கொன்று விடும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரிழப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

துரித நடவடிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முதல்கட்டமாக, உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் சுற்றித் திரிவது ஒரே நாய்கள் கூட்டமா அல்லது வெவ்வேறு நாய்கள் கூட்டமா என்பதை கண்டறிய வேண்டும். மேலும் பயிற்சி பெற்ற குழுவினரை வரவழைத்து உடனடியாக கால்நடைகளை வேட்டையாடும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கிராமப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சுற்றித் திரியும் நாய்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வனத்தில் உள்ள வேட்டை விலங்குகள் போல செயல்படும் நாய்களால் குழந்தைகளுக்கு ஏதேனும் விபரீதம் நடக்கும் முன் துரித நடவடிக்கை அவசியமாகும்.இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.


Next Story