பழமலையான் சுவாமி கோவிலில் ஆடு, கோழி பலியிட்டு சிறப்பு பூஜை


பழமலையான் சுவாமி கோவிலில் ஆடு, கோழி பலியிட்டு சிறப்பு பூஜை
x

பொம்மனப்பாடி பழமலையான் சுவாமி கோவிலில் ஆடு, கோழி பலியிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தில் மலையடிவாரத்தில் ஊர்க்காவல் தெய்வமான பழமலையான் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஊர் நன்மைக்காக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பொம்மனப்பாடி பாலகட்டாயி அம்மன் கோவிலில் இருந்து ஆண் பக்தர்கள் மற்றும் வயதான பெண்கள், சிறுமிகள் 21 ஆடுகள், 10 கோழிகளுடன் தாரை தப்பட்டை, வாண வேடிக்கை முழங்க ஊர்வலமாகவும், டிராக்டர்களிலும் பழமலையான் கோவில் வளாகத்துக்கு சென்றனர். பின்னர் ஆண் பக்தர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்றனர். நள்ளிரவில் பழமலையான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு 21 ஆடுகளையும், 10 கோழிகளையும் வெட்டி பலியிட்டு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது ஆண் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு வெட்டிய ஆடு, கோழிகள் கோவில் வளாகத்தில் வைத்து சமைக்கப்பட்டு சுவாமிக்கு படையலிட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று காலை முதல் மதியம் வரை அன்னதானமாக கறி விருந்து நடந்தது. அன்னதானத்தில் பொம்மனப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆண் பக்தர்கள் மற்றும் வயதான பெண்கள், சிறுமிகள் கலந்து கொண்டனர்.


Next Story