சின்னகோவிலாங்குளத்தில் ரூ.2.70 கோடியில் ஆடு இன ஆராய்ச்சி மையம்
சின்னகோவிலாங்குளத்தில் ரூ.2.70 கோடியில் ஆடு இன ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகோவிலாங்குளம் கிராமத்தில் ஆடு இன ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 52 ஹெக்டர் பரப்பளவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆராய்ச்சி மைய கட்டிடம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
இந்த ஆராய்ச்சி மையம் மூலம் ஆடு இனங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு மரபியல் திறனை உயர்த்தி இனவிருத்திக்காக பண்ணையாளர்களுக்கு வழங்கி, நிலைத்த வருமானத்தை பெற வழிவகை ஏற்படும். ேமலும் ஆடுகளுக்கான கொட்டகைகள் அமைக்கப்பட்டு, பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்படும். இதுதவிர இங்கு 210 ஆடுகள் வளர்க்கப்படும். பண்ணை அமைக்க தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு நவீன ஆட்டுப்பண்ணை அமைக்கப்படும். இந்த மையத்தால் தென் மாவட்ட ஆடு வளர்ப்போர் மிகுந்த பயன் அடைவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், கால்நடை துறை இணை பேராசிரியர் ஒருங்கிணைப்பாளர் ரவி முருகன், இணை பேராசிரியர் சுரேஷ்குமார், கால்நடை மருத்துவர் மலர்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.