பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச்சந்தையில் நேற்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
நாமக்கல்:
பக்ரீத் பண்டிகை
பக்ரீத் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஆட்டு சந்தைகளில் கடந்த சில நாட்களாக விற்பனை விறுவிறுப்படைந்து உள்ளது. அந்த வகையில் நாமக்கல் வாரச்சந்தையில் நேற்று அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது.
சேலம், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர்.
ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இந்த ஆடுகள் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஆட்டுக்குட்டி ரூ.500 முதல் விற்பனையானது. ஆடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். இந்த சந்தையில் வெள்ளாடுகளை காட்டிலும், செம்மறி ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஆடுகள் விலை அதிகரித்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.