திண்டுக்கல் அருகே கிடா முட்டு சண்டையில் ஆக்ரோஷமாக மோதிய ஆடுகள்


திண்டுக்கல் அருகே கிடா முட்டு சண்டையில் ஆக்ரோஷமாக மோதிய ஆடுகள்
x
தினத்தந்தி 28 May 2022 8:25 PM IST (Updated: 28 May 2022 8:27 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நடந்த கிடா முட்டு சண்டையில் ஆடுகள் ஆக்ரோஷமாக மோதி பார்வையாளர்களை கவர்ந்தன.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே நடந்த கிடா முட்டு சண்டையில் ஆடுகள் ஆக்ரோஷமாக மோதி பார்வையாளர்களை கவர்ந்தன.

கிடா முட்டு சண்டை

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை போன்று கிடா முட்டு சண்டையும் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாட்டுக்கிடாக்கள் அழியாமல் பாதுகாக்கும் வகையில், இந்த கிடா முட்டு சண்டை நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிடா முட்டு சண்டை நடத்தப்படவில்லை.

இந்தநிலையில் திண்டுக்கல் கிடா முட்டு நண்பர்கள் குழு சார்பில், இந்த ஆண்டு கிடா முட்டு சண்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திண்டுக்கல் அருகே உள்ள குட்டியபட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று கிடா முட்டு சண்டை நடைபெற்றது.

மருத்துவ பரிசோதனை

திண்டுக்கல், திருச்சி, மதுரை, சென்னை, தேனி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாட்டுக்கிடாக்கள், குரும்ப, கோங்கு வகை கிடாக்கள் என மொத்தம் 260 கிடாக்கள் பங்கேற்றன. முன்னதாக கிடா முட்டு சண்டைக்காக, தனியார் தோட்டத்தில் வட்ட வடிவில் மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கிடாக்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மைதானத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மைதானத்தில் கிடாக்கள் மோத விடப்பட்டன.

வயது, எடை அடிப்படையில்...

கிடாக்களின் பற்கள் அமைப்பு மூலம் அவற்றின் வயதை கணக்கிட்டு அவற்றின் எடைக்கு ஏற்ப, 2 கிடாக்களை தேர்வு செய்து மோத விடப்பட்டது. கிடாக்களை மோத விடுவதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.

அந்த குழுவினர் கிடாக்கள் மோதும் போது எத்தனை முறை தலையில் முட்டுகிறது என்பதை கணக்கெடுத்தனர். மேலும் பார்வையாளர்களின் கூட்டத்துக்குள் கிடாக்கள் பாய்ந்து விடாமலும் தடுத்தனர்.

அதேநேரம் போலீசாரும் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பார்வையாளர்களால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுத்து அவர்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து நிகழ்ச்சியை காண வைத்தனர்.

ஆக்ரோஷமாக மோதின

களத்தில் மோத விடப்பட்ட கிடாக்கள் அனைத்தும் ஆக்ரோஷமாக மோதின. முறுக்கு கொம்புகளை கொண்ட கிடாக்கள் முட்டியபோது எழுந்த சத்தம், சுவற்றில் கனரக வாகனம் மோதினால் எப்படி இருக்குமோ அப்படி பயங்கரமாக இருந்தது.

கிடா முட்டு சண்டையை பார்ப்பதற்கு ஏராளமானோர் திரண்டனர். எத்தனை முறை மோதினாலும் தளர்வடையாமல் சில கிடாக்கள், களத்தில் கம்பீரமாக நின்று பார்வையாளர்களை கவர்ந்தது.

தங்க நாணயங்கள்

2 கிடாக்கள் மோதும் போது தலையில் 75 முறை முட்ட வேண்டும். அப்போது வலி தாங்க முடியாமல் இரண்டில் ஏதாவது ஒரு கிடா ஓடிவிட்டால் மற்றொரு கிடா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் 2 கிடாக்களும் தலா 75 முறை தலையில் முட்டினால், அவை சமநிலை அடைந்ததாக கருதப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற 130 கிடாக்களுக்கு 1 கிராம் தங்க நாணயமும், சமநிலையை அடைந்த 130 கிடாக்களுக்கு ½ கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story