அய்யலூர் சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி அய்யலூர் சந்தையில் ஒரே நாளில் ரூ.3.கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை செய்யப்பட்டது.
அய்யலூர் ஆட்டுச்சந்தை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலூரில் ஆட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை செயல்படுகிறது. மாவட்டத்தில் ஆடுகள், கோழிகள் விற்பனையில் புகழ்பெற்ற சந்தையாக உள்ளது.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை வர்த்தகம் செய்ய அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
களைகட்டியது
கடந்த ஒரு மாத காலமாக புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து இருந்தனர். இதனால் அந்த மாதம் முழுவதும் ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்தது. இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் நிறைவடைந்ததாலும், வருகிற 24-ந்தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாலும், நேற்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது.
சந்தையில் அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் குவிந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் இல்லாததால் சந்தைக்கு வெளியே சாலை வரை கூட்டம் அலைமோதியது. வியாபாரிகள் ஆடுகளை ஆர்வமுடன் வாங்கி தங்களது வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
ரூ.3 கோடிக்கு விற்பனை
இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் விற்பனை அதிகரித்தது. இருப்பினும் போதிய விலை கிடைக்கவில்லை. கோழிகளின் விற்பனை மும்முரமாக நடந்தது. இளைஞர்கள் சண்டை சேவல்களை மோதவிட்டுப் பார்த்து சேவல்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.3 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகளின் விற்பனை நடந்தது.
தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.5 ஆயிரம் வரையிலும், செம்மறி ஆடு ரூ.5 ஆயிரத்து 500 வரையிலும், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அய்யலூர் ஆட்டுச்சந்தையில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகிறோம். எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் விற்பனை கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.