மணப்பாறை சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை
மணப்பாறை கால்நடை சந்தையில் ஆடு, மாடுகள் குறைந்த அளவிலேயே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதனால் சந்தை தொடங்கிய சில மணிநேரத்தில் விற்பனை முடிவடைந்தது. ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தன
மணப்பாறை கால்நடை சந்தையில் ஆடு, மாடுகள் குறைந்த அளவிலேயே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதனால் சந்தை தொடங்கிய சில மணிநேரத்தில் விற்பனை முடிவடைந்தது. ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கால்நடை சந்தை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை காலை வரை சந்தை நடைபெறும். செவ்வாய்க்கிழமை மாலை முதல் மாட்டுச்சந்தையும், புதன்கிழமை காலையில் ஆட்டுச்சந்தையும் நடைபெறும்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இதேபோல் கால்நடைகளை வாங்க திரளான வியாபாரிகள் வந்து செல்வர்.
பக்ரீத் பண்டிகை
இந்த நிலையில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றான தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. முஸ்லிம்கள் குர்பானி கடமையை நிறைவேற்றும் பொருட்டு ஆடு, மாடுகளை வாங்கிச் செல்வார்கள். அதன்படி நேற்று முன்தினம் மணப்பாறை மாட்டுச்சந்தையில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவிலானோர் மாடுகளை வாங்க திரண்டனர். இதனால் மாடுகள் சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.
இதைத் தொடர்ந்து நேற்று காலை ஆட்டுச்சந்தை தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. முஸ்லிம்கள் குர்பானி கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்றால் ஆடு ஒரு வருடத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும். திடகாத்திரமான ஆடுகளை தான் குர்பானி கொடுக்க முடியும். ஆனால் நேற்று நடைபெற்ற சந்தையில் திடகாத்திரமான நிலையில் உள்ள ஆடுகள் குறைந்த அளவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
ரூ.35 ஆயிரம் வரை...
இதனால் ஆடுகளின் விலை உச்சத்தை தொட்டது.
சுமார் 20 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. வேறு வழியின்றி அவைகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
இதனால் மணப்பாறை கால்நடை சந்தை தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஆடுகள் விற்றுத்தீர்ந்தன. சுமார் ரூ.6 கோடிக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கூடுதல் விலை கிடைத்ததால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.