ராணிப்பேட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ராணிப்பேட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ராணிப்பேட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை,

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ராணிப்பேட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ஆட்டு சந்தை

ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறும். காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரைகள், கடலை வகைகள் என விதவிதமான பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படும். நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தங்களது நிலங்களில் விளைந்த பொருட்களை இங்கு எடுத்து வந்து விற்பனை செய்வார்கள்.

குறிப்பாக ராணிப்பேட்டை ஆட்டு சந்தையில் கிராமப்புறங்களில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க வருவார்கள். பண்டிகை காலங்களில் இந்த ஆட்டு சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்படும்.

ரூ.1 கோடிக்கு விற்பனை

இந்த நிலையில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு நேற்று ஆட்டு சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. வழக்கத்தை விட அதிகமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள், ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆடுகளின் எடை, தரத்திற்கு தகுந்தபடி பேரம் பேசி போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். குட்டி ஆடுகள் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5000 வரை விலை போனது. நடுத்தர ஆடுகள் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10,000 வரையிலும், பெரிய ஆடுகள் அதிகபட்சமாக ரூ.15,000 வரையிலும் விலை போனதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்த ஆட்டுச் சந்தையில் வழக்கமாக ரூ.50 லட்சம் வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நேற்று சுமார் ரூ.1 கோடி வரை வியாபாரம் நடந்ததாக தெரிவித்தனர்.

அடிப்படை வசதி இல்லை

தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக ராணிப்பேட்டையில் தான் ஆட்டுச் சந்தை மிகவும் பிரபலம். ஒரு காலத்தில் இங்கு 6,000 ஆடுகள் வரை விற்பனையாகியுள்ளது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் சந்தைகள் வந்து விட்டதால், குறைந்த அளவிலேயே ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. முன்பு 10 ஏக்கர் பரப்பளவில் இந்த சந்தை இருந்தது. தற்போது சுற்றிலும் அரசு கட்டிடங்கள் வந்துவிட்டது. சந்தையின் அளவு மிகவும் சுருங்கி விட்டது.

விற்பனைக்காக அழைத்து வரப்படும் ஆடுகளை நிற்க வைக்க கூட இடமில்லாமல் இருக்கிறது. மின்சாரம், குடிநீர், கழிவறை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. விற்பனைக்காக நள்ளிரவே பல்வேறு இடங்களில் இருந்து ஆடுகள் வாகனங்களில் அழைத்து வரப்படுகின்றன. அதிகாலையில் இருந்து மதியம் வரை விற்பனைக்காக அவை கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த நேரங்களில் ஆடுகளுக்கு தீவனம், தண்ணீர் என எதுவும் கிடைப்பது இல்லை. எனவே ஆடுகள் தண்ணீர் அருந்துவதற்கு தொட்டிகள் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story