மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை


மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

ரம்ஜான் பண்டிகையையொட்டி நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய சந்தையான மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இந்த சந்தையில் தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், பொங்கல், ஆடி, சித்திரை மாதங்களில் நடைபெறும் கோவில் கொடை விழா, பங்குனி உத்திர விழா ஆகிய நாட்களில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடக்கும்.

போட்டிப்போட்டு வாங்கினார்கள்

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தைக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து நேற்று ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

ரூ.5 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும் விலையை பொருட்படுத்தாமல் ஆடுகளின் தரம், எடை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆடுகளை பொதுமக்கள், வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கினார்கள். ஒரு கிடா ரூ.32 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ரூ.3 கோடிக்கு விற்பனை

தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வள்ளியூர், ஆலங்குளம், கன்னியாகுமரி, காயல்பட்டினம், ரகுமானியாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் ஆடுகளை வாங்கி லோடு ஆட்டோக்களில் ஏற்றிச் சென்றனர். சிலர் தங்களுடைய கார்களிலும், மோட்டார் சைக்கிளிலும் ஆடுகளை கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

நேற்று ஒரே நாளில் மேலப்பாளையம் சந்தையில் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி இருக்கும் என்று வியாபாரிகள் கூறினார்கள். மேலும் சந்தைக்கு வந்த வாகனங்களுக்கு நேற்று மட்டும் 4,000 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு டோக்கன் ரூ.50 வீதம் ரூ.2 லட்சம் வசூலானது.



Next Story