சீல் வைக்கப்பட்ட காப்பகத்தில் இருந்து திருடிய சாமி சிலை சாக்கடை கால்வாயில் கிடந்தது


சீல் வைக்கப்பட்ட காப்பகத்தில் இருந்து திருடிய சாமி சிலை சாக்கடை கால்வாயில் கிடந்தது
x

திருப்பூரில் சீல் வைக்கப்பட்ட காப்பகத்தில் இருந்து திருடிய சாமி சிலை சாக்கடை கால்வாயில் கிடந்தது. இதை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்

திருப்பூரில் சீல் வைக்கப்பட்ட காப்பகத்தில் இருந்து திருடிய சாமி சிலை சாக்கடை கால்வாயில் கிடந்தது. இதை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சாமி சிலை மீட்பு

திருப்பூர் காலேஜ் ரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே சாக்கடை கால்வாயை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கால்வாய்க்குள் ஏதோ தட்டுப்பட்டது. அதை பார்த்த போது அது சாமி சிலை என்பது தெரியவந்தது. அதை தூக்கி வெளியே கொண்டு வந்தனர். அது 3 அடி உயர கிருஷ்ணர் சிலை என்பது தெரியவந்தது. உடனடியாக தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தனர்.

இது குறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சுமார் 15 கிலோ எடை கொண்ட பித்தளை கிருஷ்ணர் சிலை என்பது தெரியவந்தது. பின்னர் சிலையை வடக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

சேவாலயத்தில் திருடப்பட்டது

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மீட்கப்பட்ட சிலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமுருகன் பூண்டியில் உள்ள ஸ்ரீவிவேகானந்த சேவாலயத்தில் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்தது.

கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 மாணவர்கள் இறந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த காப்பகம் 'சீல்' வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அந்த காப்பகத்தின் பின்புற கதவை உடைத்து உள்ளே இருந்த சாமி சிலைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போனதாக காப்பக நிர்வாகி ஏற்கனவே புகார் அளித்து இருந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வந்த நிலையில் கிருஷ்ணர் சிலை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த காப்பகத்தில் இருந்து ஏற்கனவே 2 சாமி சிலைகள் திருட்டு போய் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருடிய சிலையை போலீசுக்கு பயந்து சாக்கடை கால்வாயில் வீசிய மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story