தக்கலை அருகே கோவில் குளத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு
தக்கலை அருகே கோவில் குளத்தில் இருந்து அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
தக்கலை,
தக்கலை அருகே கோவில் குளத்தில் இருந்து அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
மன்னர் காலத்து கோவில்
தக்கலை அருகே உள்ள வாள்வச்சகோஷ்டத்தில் மகிஷாசுர மர்த்தினி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் கட்டப்பட்டது. மன்னர் போருக்கு போகும் முன்பு இந்த ்கோவிலுக்கு வந்து போர் வாளை வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்னரே செல்வது வழக்கம். இதனால்தான் இந்த இடத்தை வாள்வச்ச கோஷ்டம் என அழைக்கிறார்கள்.
இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. இங்கு திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ஆராட்டு குளத்தை தூர்வாரும் பணி கடந்த சனிக்கிழமை ெதாடங்கி நடைபெற்று வருகிறது.
அம்மன் சிலை
இந்தநிலையில் நேற்று தூர்வாரும் பணி நடந்த போது குளத்தில் ஒரு அம்மன் சிலை புதைந்து கிடப்பதை ெதாழிலாளர்கள் பார்த்தனர். உடனே அதை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து கோவில் மேலாளரும், தொகுதி கண்காணிப்பாளருமான சண்முகம்பிள்ளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்ததும் அவரிடம் அம்மன் சிலை ஒப்படைக்கப்பட்டது.
இந்த சிலை ஒரு அடிக்கும் குறைவான உயரம் கொண்டதாக இருந்தது. இது ஐம்பொன் சிலையா? அல்லது தாமிர சிலையா? என்பதை ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என கூறப்படுகிறது.
இந்த சிலையானது முற்காலத்தில் திருவிழாவின்போது பயன்படுத்தும் உற்சவ மூர்த்தியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சிலை காணாமல் போனதற்கான பதிவுகள் கோவில் ஆவணங்களில் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்தால் இந்த சிலை எந்த காலகட்டத்தை சேர்ந்தது என்பதை அறியமுடியும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
பக்தர்கள் பரவசம்
இதற்கிடையே கோவில்குளத்தில் இருந்து அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கோவிலில் திரண்டனர். அவர்கள் அந்த அம்மன் சிலையை பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.