17 பவுன் நகைகள்-ரூ.4½ லட்சம் கொள்ளை
திருத்துறைப்பூண்டி அருகே இறைச்சிக்கடைக்காரர் வீட்டில் 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.4½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே இறைச்சிக்கடைக்காரர் வீட்டில் 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.4½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உறவினர் வீட்டுக்கு சென்றனர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டிமுளை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கமர்தீன். இவருடைய மனைவி ரபியா பேகம்(வயது 55). கணவர் இறந்து விட்டதால் மகன்கள் சிராஜுதீன்(35), ஆசிக்முகமது (30) மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் ரபியாபேகம் வசித்து வருகிறார்.சிராஜுதீனும் அவரது சகோதரரும் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் சிராஜுதீனும் அவரது சகோதரரும் இறைச்சிக்கடைக்கு சென்று விட்டனர். வீட்டில் உள்ள பெண்கள் கும்பகோணத்தில் உறவினர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.
17 பவுன் நகைகள்-ரூ.4½ லட்சம் கொள்ளை
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபா்கள் ரபியாபேகம் வீ்ட்டின் பூட்டைஉடைத்து பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.