5 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு


5 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
x

தஞ்சையில் ஓட்டல் உரிமையாளர் தவற விட்ட 5 பவுன் நகையை எடுத்த நகைக்கடை ஊழியர்கள், அதனை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் ஓட்டல் உரிமையாளர் தவற விட்ட 5 பவுன் நகையை எடுத்த நகைக்கடை ஊழியர்கள், அதனை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

ஓட்டல்உரிமையாளர்

தஞ்சை கரந்தையைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து 5 பவுன் எடை கொண்ட கை காப்பு நகையை அடகு வைப்பதற்காக எடுத்து வந்தார். அதனை தனது பேன்ட் பையில் வைத்திருந்தார். பின்னர் ஓட்டலுக்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு திரும்புவதற்காக பையை பார்த்த போது நகையை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த தாமரைச்செல்வன் பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை. இதனால் மிகுந்து மனவேதனை அடைந்தார். இதற்கிடையில் தஞ்சை தெற்கு அலங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் வேலை பார்க்கும் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நவீன், அஜ்மல், ஜஸ்வின் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து சாப்பிடுவதற்காக வெளியே பழைய பஸ் நிலையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

நகைக்கடை ஊழியர்கள் எடுத்தனர்

அப்போது அங்கு கிடந்த கை காப்பு நகையை கண்டெடுத்தனர். பின்னர் நகைக்கடை ஊழியர்கள் கண்டெடுத்த நகையை தஞ்சை மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்தனர். அவர் தஞ்சையில் உள்ள அனைத்து போலீஸ்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து யாராவது நகையை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனரா? என விசாரணை நடத்தினார். ஆனால் யாரும் புகார் அளிக்கவில்லை.மேலும் நகைக்கடை உரிமையாளர்களிடமும், யாராவது நகையை காணவில்லை என வந்தால் தெரியப்படுத்துமாறு கூறினார். அப்போது நகையை தொலைத்த தாமரைச்செல்வனும் நேற்று காலை தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று காணாமல் போன நகையை கண்டுபிடித்து தருமாறு புகார் அளிக்க வந்தார். அப்போது நகைக்கடை ஊழியர்கள் எடுத்து ஒப்படைத்த நகை தாமரைச்செல்வனுக்குசொந்தமானது என தெரிய வந்தது.

உரியவரிடம் ஒப்படைப்பு

இதையடுத்து போலீசார் உரிய விசாரணை நடத்தி, தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்கமல், சசிரேகா மற்றும் போலீசார் நகையை தொலைத்தவரிடம், நகைக்கடை ஊழியர்கள் முன்னிலையில் நகையை திருப்பி ஒப்படைத்தனர். நகையைப் பெற்றுக் கொண்ட தாமரைச்செல்வன், கண்டெடுத்த இளைஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். அப்போது நகைக் கடையை ஊழியர்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story