ஊர்க்காவல் படையினர் அடங்கிய கும்பலிடம்ரூ.2 கோடி, 1¼ கிலோ தங்க நகைகள் மீட்பு


ஊர்க்காவல் படையினர் அடங்கிய கும்பலிடம்ரூ.2 கோடி, 1¼ கிலோ தங்க நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி, 1¼ கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

சிவகங்கை


காரைக்குடியில் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி, 1¼ கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

நகை, பணம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் சோமு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). இவர் காரைக்குடி நகைக்கடை பஜாரில் நகைக்கடை வைத்திருப்பவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் தங்க கட்டிகளை வாங்கிக்கொண்டு கடந்த 11-ந் தேதி சென்னை சென்றார். அந்த நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகை தொழிற்சாலையில் கொடுத்தார்.

அங்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த தங்க நகை மற்றும் ரூ.2 கோடியே 2 லட்சம் ஆகியவற்றை வாங்கி கொண்டு சென்னையில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை காரைக்குடி கழனிவாசல் பஸ் நிலையம் வந்தார்.

6 தனிப்படை

அங்கு காரில் வந்த 3 பேர் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றனர். பின்னர் அவரிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகை, வெள்ளி பொருட்களை பறித்து கொண்டு அவரை கீழே இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில், சிவகங்கை சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமசிவாயம், காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ரவிச்சந்திரனை கடத்திய காரை சென்னை அமைந்தகரையை சேர்ந்த சூர்யா என்ற நாகேந்திரன் (57) என்பவர் வாடகைக்கு எடுத்து சென்றதாகவும், காரை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த பால்ராஜ் (57) என்பவர் ஓட்டிச் சென்றதாகவும் தெரியவந்தது.

6 பேர் கைது

தனிப்படை போலீசார் நாகேந்திரனை பிடித்து விசாரித்தபோது, ரவிச்சந்திரனிடம் இருந்து பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை நாகேந்திரன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்தது தெரிந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய பால்ராஜ் (57), விஜயகுமார் (52), சாமுவேல் (36), சென்னை சிந்தாதிரிப்பேட்டை சதீஷ்குமார் (36), சூளைமேடு பெருமாள் (51) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 2 லட்சம், ஒரு கிலோ 471 கிராம் எடையுள்ள தங்க நகைகள், ஒரு கிலோ 900 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊர்க்காவல் படை வீரர்கள்

இதில் கைதான நாகேந்திரன் ஊர்க்காவல் படை கமாண்டராக பணிபுரிந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர். இதே போல கைதான சதீஷ்குமார் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்.

சாமுவேல் தற்போது சென்னையில் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிகிறார்.

நாகேந்திரன் தலைமையிலான கும்பல் கடந்த ஒரு ஆண்டாக ரவிச்சந்திரனை பின் தொடர்ந்து வந்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேற்கண்ட தகவல்களை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை நேற்று சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமசிவாயம், உதவி சூப்பிரண்டு ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி. துரை பரிசு வழங்கி பாராட்டினார்.


Next Story