வேளாண் துறை பெண் அதிகாரி வீட்டில் 19½ பவுன் நகை-பணம் கொள்ளை
தஞ்சையில் வேளாண் பெண் அதிகாரி வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து 19 ½பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் வேளாண் பெண் அதிகாரி வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து 19 ½பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வீட்டின் பூட்டு உடைப்பு
தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 48). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா. இவர் வேளாண் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த செந்தில்குமார், வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.
19½ பவுன் நகை- பணம்
மேலும் அதில் இருந்த தங்க சங்கிலி, டாலர், நெக்லஸ் உள்ளிட்ட 19½ பவுன் நகைகள் மற்றும் ரூ.8 ஆயிரம் இல்லாதது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.