வரலாறு காணாத புதிய உச்சம் ஒரு பவுன் தங்கம் ரூ.46 ஆயிரத்தை தொட்டது


வரலாறு காணாத புதிய உச்சம் ஒரு பவுன் தங்கம் ரூ.46 ஆயிரத்தை தொட்டது
x

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணிக்கிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.46 ஆயிரத்தை தொட்டது. இது வரலாறு காணாத புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) முழுவதும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. ஆனால் பெரும்பாலான நாட்கள் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்வை நோக்கியே செல்கிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.91-ம், பவுனுக்கு ரூ.728-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 706-க்கும், ஒரு பவுன் ரூ.45 ஆயிரத்து 648-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது.

புதிய உச்சம்

இதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.44-ம், பவுனுக்கு ரூ.352-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 750-க்கும், ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை பெரும்பாலும் உயர்வை நோக்கியே இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. நேற்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் 82 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.82 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.


Next Story