துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை,
துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று காலை துபாயில் இருந்து மதுரை வந்த தனியார் விமானத்தில் 160 பயணிகள் வந்தனர். இதில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் பகுதியை சேர்ந்த அவினாஷ் என்ற பயணியிடம் சுங்க புலனாய்வு துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 348 கிராம் எடையுள்ள நிக்கல் பிளேட் கோட்டிங்குடன் கூடிய வட்டவடிவிலான தங்க பொருளும், 349 கிராம் எடையுள்ள அலுமினிய காப்பு போல் உள்ள தங்க பொருளும் இருந்தது தெரிய வந்தது.
இதனை சுங்க புலானாய்வு துறைஅதிகாரிகள் கைப்பற்றினர். அவினாஷிடமிருந்து கைப்பற்றப்பட்ட 697 கிராம் எடையுள்ள தங்கம் ரூ. 35 லட்சத்து 21 ஆயிரத்து 244 இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து சுங்க இலாகா நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் அவினாஷிடம் விசாரணை செய்து வருகின்றனர்.