புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி ஆராதனை நிகழ்ச்சி
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி ஆராதனை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி ஆராதனை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இறை வாழ்வு
ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.
கிறிஸ்தவ வழிபாட்டில் முக்கியமான புனித வெள்ளி நாள் ஏசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) கொண்டாட்டத்துக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலயம்
ஏசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடக்கிறது.
பெரிய வியாழன்
கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்படும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்களால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த 2-ந் ்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனியுடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ் சீடர்களுக்கு புனித நீரால் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெற்றது.
புனித வெள்ளி ஆராதனை
இன்று புனித வெள்ளியை முன்னிட்டு பேராலயத்தில் மாலை 5.30 மணிக்கு இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை, சிலுவை பாதை மற்றும் ஏசுவின் திருவுருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக எடுத்து செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.