சிறப்பாக பணிபுரியும் விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு கேடயம் -கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா, புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மொத்தம் 427 மனுக்கள் வழங்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
பாராட்டு கேடயம்
கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில், சிறந்த விடுதிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி பென்னாகரம் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதி முதல் பரிசை பெற்றது. இந்த விடுதியில் சிறப்பாக பணியாற்றும் காப்பாளர் விநாயகசுந்தரிக்கு பரிசுத்தொகையாக ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
2-வது பரிசாக நரிப்பள்ளி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் பணியாற்றும் காப்பாளர் ஜெயந்திக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு கேடயம், சான்றிதழும், 3-வது பரிசாக மொரப்பூர் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் பணியாற்றும் காப்பாளர் சுமதிக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசு, பாராட்டு கேடயத்தை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
இ-பட்டா
மேலும் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை மற்றும் இணைய வழி இ-பட்டாவுக்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.