தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் கைது
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பரமக்குடியை சேர்ந்தவரை மோசடி வழக்கில் சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பரமக்குடியை சேர்ந்தவரை மோசடி வழக்கில் சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நல்லாசிரியர் விருது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த கீழாம்பல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராமச்சந்திரன் (வயது 38). இவர் கடந்த செப்டம்பர் மாதம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றிருந்தார்.
தமிழகத்தில் இவர் ஒருவர்தான், அந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கு எப்போது, மாணவர்களை போன்று சீருடை அணிந்துதான் சென்று பணியாற்றினார். தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதியிடம் வாங்கியபோது, பள்ளிச்சீருடைதான் அணிந்து இருந்தார். இது அப்போது பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்தநிலையில் இவரது அண்ணன் பஞ்சாட்சரம், மதுரை, ராமநாதபுரத்தில் வரி தொடர்பான தகவல்கள் அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், பல்வேறு நபர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டில் புகார்கள் வந்தன. அதன்பேரில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த புகார்களின் அடிப்படையில் அவரை கைது செய்தனர்.
மோசடி வழக்கில் கைது
தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்தநிலையில் அவரது தம்பியும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான ராமச்சந்திரன் வங்கி கணக்கிற்கு பஞ்சாட்சரம் நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், ராமச்சந்திரனிடம் விசாரித்தனர். பின்னர் அவர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரையும் நேற்று மாலையில் சி.பி.ஐ. போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படியும், மீண்டும் வருகிற 10-ந்தேதி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி தமிழரசி நேற்று உத்தரவிட்டார்.
சிறையில் அடைப்பு
அதன்பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சில மாதங்களிலேயே மோசடி வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.