30 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் தொடக்கம்


30 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் தொடக்கம்
x

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்ட சரக்கு முனையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்ட சரக்கு முனையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

பட்டுக்கோட்டை ரெயில் நிலையம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு உப்பு, கருவாடு, மீன், நெல், அரிசி முதலிய உணவுப் பொருட்கள் ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் 1993-ம் ஆண்டிலிருந்து சரக்கு ரெயில்கள் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள், பொதுமக்கள் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மீண்டும் சரக்கு ரெயில்கள் மூலம் சரக்குகளை அனுப்ப சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரூ.8 கோடியில்

அதன்படி பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ.8 கோடி மதிப்பீட்டில் ரெயில் முனையம் அமைக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் தொடக்க விழா நடைபெற்றது. ரெயில்வே சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் ஜான் கென்னடி தலைமையில் தொழிலாளர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

நிகழ்ச்சியில் நுகர் பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி ரெயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பெத்துராஜ், பட்டுக்கோட்டை ரெயில் நிலைய அலுவலர் மருதுபாண்டியன், வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் போஜராஜன் மற்றும் வட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம், பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நெல் அனுப்பி வைப்பு

பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 83 லாரிகளில் தலா 300 நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு 21 ரெயில் சரக்கு பெட்டிகளில் மொத்தம் 1,000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டன. இந்த சரக்கு ரெயில் மூலம் அரைவைக்காக நெல் மூட்டைகள் ராஜபாளையம் கொண்டு செல்லப்பட்டது. பட்டுக்கோட்டை ரெயில் நிலைய சரக்கு ரெயில் முனையம் மூலம் 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள், 450 லாரி டிரைவர்கள், லாரி உரிமையாளர்கள் பயன்பெறுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ள இந்த சரக்கு முனையம் ஒரு வரப்பிரசாதம் என இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story