ரூ.20 லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசம்


ரூ.20 லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
x

கும்பகோணத்தில் டயர் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

தஞ்சாவூர்

கும்பகோணம் ரயில் நிலையம் அருகே லால்பகதூர் சாஸ்திரி சாலையில் கார்த்திகேயன் (வயது 50) என்பவர் வாகனங்களுக்கான டயர் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், நவீன எந்திரங்கள் மூலம் நான்கு சக்கர வாகனங்களின் டயர்களை சீரமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் இந்த டயர் கம்பெனியில் நடந்து வந்தன. இந்தநிலையில் பூட்டப்பட்டிருந்த இந்த கடையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. பின்னர், டயர்கள் மற்றும் அங்குள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிய தொடங்கின.

ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்

இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும் இதில் டயர் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயர்கள் மற்றும் தொழில்நுட்ப வேலைக்காக வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்களுக்கு காற்று பிடிக்கும் எந்திரம்(கம்பரசர்) ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின. இதன் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story