ஈரோட்டில் கோர விபத்து: லாரி மோதி ரெயில்வே பெண் ஊழியர் உடல் நசுங்கி சாவு இறந்த உறவினரின் துக்கம் விசாரிக்க வந்தபோது பரிதாபம்
இறந்த உறவினரின் துக்கம் விசாரிக்க வந்தபோது பரிதாபம்
ஈரோட்டில் லாரி மோதி தர்மபுரி ரெயில்வே பெண் ஊழியர் உடல் நசுங்கி செத்தார். இறந்த உறவினரின் துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் இந்த கோர விபத்து நடந்தது.
ரெயில்வே ஊழியர்
தஞ்சை பில்லிக்கார் வீதியை சேர்ந்தவர் செல்வம். தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜயா. இவர் தினக்கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் அனிதா (வயது 30).
ஆசிரியை படிப்பு முடித்து உள்ள இவர், ரெயில்வே துறை தேர்வு எழுதி வெற்றி பெற்றார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் அரூர் ரெயில்நிலையத்தில் ஊழியராக பணியில் சேர்ந்தார். அனிதாவுக்கு திருமணம் ஆகவில்லை.
துக்கம் விசாரிக்க
அனிதா தாயாரின் அக்காள் வீடு ஈரோடு திண்டலில் உள்ளது. அவரது மகன் பிரசாந்த் என்பவர் நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். எனவே அனிதா அவரது தாய், தந்தையுடன் துக்கம் விசாரிப்பதற்காக நேற்று திண்டல் வந்தார். துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், உறவினர்களான தனுஷ் (19), ரியாஸ் (11) ஆகியோருடன் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் ஈரோடு டவுணுக்கு வந்தார்.
அனிதா அவருக்கு தெரிந்த தோழி ஒருவரை பார்த்துவிட்டு, சில பொருட்கள் வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மதியம் 2 மணி அளவில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் திண்டல் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தனுஷ் ஓட்டினார். பின்னால் அனிதாவும், ரியாசும் உட்கார்ந்து இருந்தனர்.
உடல் நசுங்கி சாவு
அவர்கள் வீரப்பம்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிளில் உரசியது. அதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில், மோட்டார் சைக்கிளில் வந்த அனிதா, தனுஷ், ரியாஸ் 3 பேரும் சாலையில் தடுமாறி விழுந்தனர். அதில் அனிதா எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கினார். அவர் 50 அடி தூரத்துக்கும் மேல் இழுத்துச்செல்லப்பட்டார். அவர் மீது லாரி சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ெசத்தார். ரத்த வெள்ளத்தில் அனிதா கிடந்ததை பார்த்து தனுசும், ரியாசும் கதறி அழுதனர். இதற்கிடையே லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.
அனிதா பலியானதை நேரில் பார்த்த சிலர் ஆத்திரம் அடைந்து லாரியின் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சிலர் தனுஷ் மற்றும் ரியாசை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள்
விபத்து குறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரேஷ், கந்தசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் உடல் நசுங்கி பலியான அனிதாவின் உடலை மீட்க போலீசார் முயற்சி செய்தனர். ஆனால், சக்கரத்துக்குள் உடல் முழுமையாக சிக்கி சிதைந்து இருந்ததால் உடனடியாக மீட்க முடியவில்லை.
அதைத்தொடர்ந்து ஈரோடு தீயணைப்பு நிலைய அதிகாரி ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் லாரி ஜாக்கி மூலம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகே அனிதாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
லாரி டிரைவர் பிடிபட்டார்
பலியான ரெயில்வே ஊழியர் அனிதாவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் செல்வம், விஜயா மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்தில் தனுஷ், ரியாஸ் ஆகிய 2 பேரும் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.
இதற்கிடையே தப்பி ஓடிய லாரி டிரைவரையும் போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து பெருந்துறை ரோடு பகுதியில் நேற்று மதியம் பரபரப்பை ஏற்படுத்தியது.