அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
தேங்கும் கழிவுநீர்
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் முகப்பு பகுதியில் பிரதான நுழைவு வாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் முன்பாக ரோட்டோரத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி முழுமை அடையாமல் உள்ளது. இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் மருத்துவமனையின் முன்பாக குளம் போல் தேங்கி நிற்கிறது. கடந்த பல மாதங்களாகவே இந்த பிரச்சனை இருந்து வரும் நிலையில், எந்த ஒரு தீர்வும் காணாமல்அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர். கழிவு நீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. அருகில் பஸ் நிறுத்தம் இருப்பதால் பொதுமக்கள் துர்நாற்றத்திற்கு மத்தியில் பஸ்சுக்காக காத்து நிற்கும் அவலம் உள்ளது.
நோய்க்கு அழைப்பு
மருத்துவமனையின் முன்பாக கழிவுநீர் இருப்பது சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், மருத்துவமனை வரும் பார்வையாளர்களுக்கும் நோய் பரப்பும் வகையில் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் கழிவுநீர் அனைவருக்கும் இடையூறு தருவதாக உள்ளது. இதேபோல் இந்த ரோடு வழியாக அதிக அளவிலான வாகனங்களும் செல்வதால் வாகனப் போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையின் சுற்றுப்புற வளாகம் தூய்மையாக இருக்க வேண்டிய நிலையில், நோய்க்கு அழைப்பு விடுக்கும் வகையில் மாசுபட்டு இருப்பதை இனியாவது அதிகாரிகள் கவனிப்பார்களா?.