தென்னை விவசாயிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை


தென்னை விவசாயிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை
x

தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தென்னை விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்க மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர்,

தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தென்னை விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்க மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அமைப்புக்குழு கூட்டம்

விருதுநகரில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில அமைப்புக்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் விஜய முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை அமைப்பாளர் முத்துராமன், தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன், விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத்தலைவர் முத்தையா, விருதுநகர் மாவட்ட விவசாய சங்கத்தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில அமைப்பாளர் விஜயமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூ. 20 வரை விற்பனையான தேங்காய் தற்போது ரூ. 8 மற்றும் ரூ.9-க்கு விற்பனையாகிறது.

தேங்காய் கொள்முதல்

கொப்பரை தேங்காய் கிலோ ரூ.105-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு தேங்காய் கொள்முதல் நிலையங்களை அமைத்து நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரை கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் 4 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. எனவே தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

மாநில மாநாடு

ராஜபாளையம் மற்றும் சாத்தூரில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சாத்தூரில் தென்னை விவசாயம் இல்லாத நிலையில் அங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதனை வத்திராயிருப்புக்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற 30-ந் தேதி உடுமலைப்பேட்டையில் தென்னை விவசாயிகள் சங்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Next Story