ரூ.26¾ கோடியில் அரசு கலைக்கல்லூரி, பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம்
சேர்க்காட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு ரூ.26¾ கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் அடிக்கல்நாட்டினர்.
அரசு கலைக்கல்லூரி, மருத்துவமனை
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட சேர்க்காடு பகுதியில் உயர்கல்வித்துறை சார்பில் ரூ.12 கோடியே 46 லட்சத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.14 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 60 படுக்கைகள் கொண்ட அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கும் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
நீர்வளத்துறை அமைச்சர் ருமான துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் அடிக்கல் நாட்டினர். மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் அரசு பல்கலைக் கழக துணை வேந்தர் ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
மாடல் சிட்டியாக....
காட்பாடியில் உப்புத்தண்ணீர் என்பதால் யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். அதற்காக முதலில் பாலாற்று நீரை கொண்டு வந்தேன். பிறகு காவிரி நீரை கொண்டு வந்துள்ளேன். காவேரி நீர் கிடைக்காத இடங்களுக்கு விரைவில் கொண்டுவரப்படும். வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பொன்னை ஆறு மேல்பாடி பாலம் கட்ட பணம் ஒதுக்கிவிட்டேன். விரைவில் அதற்்கும் அடிக்கல் நாட்டப்படும்.
தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் 60 படுக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 100 படுக்கை கொண்டு வந்து மேம்படுத்தி அனைத்து வசதிகளும் கொண்டுவரப்படும். தமிழக பட்ஜெட்டுக்கு பிறகு முதல்-அமைச்சரிடத்தில் பேசி இந்த ஆண்டுக்குள் இதே சேர்க்காடு பகுதியில் ஒரு சிப்காட் கொண்டுவரப்போகிறேன். அதேபோல் கலைஞர் கருணாநிதி வாங்கி வைத்த 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த 100 ஏக்கரில் டெல் தொழிற்சாலைக்கு அருகே ஐ.டி. பார்க் கொண்டு வருவேன். என்னால் முடிந்ததை இந்த தொகுதிக்கு தொடர்ந்து செய்வேன். இந்த அரசு கலைக் கல்லூரி கட்டிடம் விரைவாக கட்டப்படும். மாடல் சிட்டியாக சேர்காடை மாற்ற வேண்டும் என்பது எனது கனவு.
இவ்வாறு அவர் பேசினார்.
31 அரசு கல்லூரிகள்
முன்னதாக அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 20 மாதத்தில் புதிதாக 31 அரசு கல்லூரி அமைக்க ஆணையிட்டுள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் நடக்காத ஒன்று. பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஆண்களைக் காட்டிலும் அதிகம் பெண்களே உயர் கல்வி பயின்று வருகிறார்கள். இது தான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.
நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வி.வேல்முருகன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜி.வன்னியராஜா, காந்திநகர் பகுதி செயலாளர் என்.பரமசிவம், காட்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணை தலைவருமான எஸ்.சரவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தணிகாசலம், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கருணாகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்னை சி.ரவி, வாலாஜா ஒன்றிய செயலாளர் ஏ.கே.முருகன், தாசில்தார் ஜெகதீஸ்வரன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரிகளின் கல்வி இணை இயக்குனர் காவேரி நன்றி கூறினார்.